இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வாகியுள்ள நிலையில் அவர் குறித்து வெளியான காமெடி வீடியோ ஒன்றை நடிகர் விக்ரம் ஷேர் செய்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்த லிஸ் ட்ரஸ் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் அதேசமயம், அவரது நிறம் மற்றும் பூர்விகம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பழமைவாதிகள் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பிரபலமான தி டெய்லி ஷோ என்ற அரசியல் பகடி நிகழ்ச்சியில் ரிஷி சுனக் குறித்து தொகுப்பாளர் காமெடியாக பேசும் வீடியோ ஒளிபரப்பானது. அதில் ரிஷி சுனக்கை அவரது நிறம் மற்றும் தேசம் குறித்து சிறுமையாக பேசும் நிறவெறியர்களை பகடி செய்து தொகுப்பாளர் பேசியிருந்தார்.
அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகர் விக்ரம் “இதை பார்த்ததில் இருந்து என் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும் இதை நான் ஷேர் செய்கிறேன். முதலில் அமெரிக்காவின் துணை அதிபர். தற்போது பிரிட்டனின் பிரதமர். வா ராஜா வா!” என பதிவிட்டுள்ளார். இந்தியர்கள் பல நாடுகளிலும் அடையும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டும், அவர்களை விமர்சிப்பவர்களை பகடி செய்தும் விக்ரம் இந்த பதிவை ஷேர் செய்துள்ளார்.