இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர்களான விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தின் வழக்கறிஞர் குழுவினர் டெல்லியில் உள்ள திஹார் சிறையை நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி, அதனைத் திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு விஜய் மல்லையா தப்பி சென்றார். அதேபோல் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,800 கோடி மோசடி செய்துவிட்டு, 2019-ஆம் ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டார்.
இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றங்கள் ஒப்புதல் அளித்த போதிலும், இந்திய சிறைகளில் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று இருவரும் முறையிட்டதால், நாடு கடத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது.
எனவே இருவரையும் பாதுகாப்பாகவும், மனிதநேயத்துடனும் நடத்துவோம் என இந்தியா இங்கிலாந்துக்கு உறுதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து இங்கிலாந்து அதிகாரிகள் திஹார் சிறையை ஆய்வு செய்தபோது, அங்குள்ள கைதிகளுடன் பேசினர். மேலும், லண்டனில் இருந்து வரும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான அறைகள் வழங்கப்படும் என்றும், தேவைப்பட்டால் சிறை வளாகத்திலேயே தனி அறைகள் கட்டப்படும் என்றும் சிறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.