உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு “ராம் ராம்” என சொல்ல பயிற்சி அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதும் நாய் வளர்ப்பு என்பது மக்களிடையே பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. பலரும் தங்களது வளர்ப்பு நாய்களை தங்கள் தேவைக்கு ஏற்ப வளர்க்கின்றனர். வேட்டைக்காரர்கள் வேட்டை நாய்களை வளர்ப்பது போல, சிலர் வீடுகளில் செல்ல நாய்களை வளர்த்தாலும் அவற்றிற்கு பேப்பர் எடுத்து வர, கீபோர்ட் வாசிக்க, டிவி பார்க்கவெல்லாம் சொல்லி தருகிறார்கள்.
தற்போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தனது நாய்க்கு அதுபோல வித்தியாசமாக பேச சொல்லி கொடுக்க முயன்றிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவதா தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் கியான் திவாரி. இவர் தனது நாய்க்கு “ராம் ராம்” என சொல்லுமாறு பயிற்சி அளித்து வந்துள்ளார்.
அவர் “ராம் ராம்” என கூறினால் அந்த நாய் இருமுறை குரைக்கிறது. அதற்கு பிஸ்கட் தரும் முன் அவர் அவ்வாறு முயற்சி செய்தார். முதலில் குரைத்த நாய் பின்னர் பிஸ்கட் தராததால் முனகியது. பின்னர் அவர் அதற்கு பிஸ்கட் கொடுத்தார். இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.
பாஜக ஆதரவாளர்கள் பலர் அவர் அந்த நாய்க்கு அவ்வாறு சொல்லிக் கொடுத்தது பற்றி புகழ்ந்து வருகின்றனர். எனினும் விலங்குகள் ஆர்வலர்கள் சிலர், அதால் பேச முடியாது என தெரிந்தும் ஏன் அதை வருத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.