உத்தர பிரதேசத்தில் சிறுவனை கொன்று தப்பிய ஆட்கொல்லி சிறுத்தை பிடிப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மோதிப்பூர் மலைப்பகுதியில் கதர்னியா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் சாஹில் என்ற சிறுவன் சில குழந்தைகளுடன் விளையாடியுள்ளான். அப்போது அங்கு திடீரென தோன்றிய சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் கூச்சலிடவே சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை தப்பியுள்ளது.
ஆனால் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். எனவே ஆட்கொல்லியாக மாறிய அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆட்கொல்லி சிறுத்தை பிடிபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் அடிக்கடி புலி, சிறுத்தையால் மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.