தமிழகம் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், கவர்னர் மற்றும் முதலமைச்சர் மோதல் என்பது பொதுவான ஒன்றாக உள்ள நிலையில், கேரளாவில் திடீரென கவர்னரும் முதல்வரும் நண்பர்களாக மாறியிருப்பது அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள கவர்னராக இருந்த ஆரிப்கான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது புதிய கவர்னராக ராஜேந்திர விசுவநாத் பதவி ஏற்றுள்ளார். அவருக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் அதீத நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரள கவர்னராக பதவி ஏற்க வந்த அன்று, அவரை வரவேற்க முதல்வர் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, அவ்வப்போது ராஜ்பவனுக்கு தனது குடும்பத்துடன் முதல்வர் பினராயி விஜயன் சென்று வருவதாகவும், சமீபத்தில் நடந்த குடியரசு தின விழா தேநீர் விருந்திலும் கலந்து கொண்டு, கவர்னரிடம் அன்பை பரிமாறியதாகவும் கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். பின்னணியை சேர்ந்தவர் என்று ராஜேந்திர விசுவநாத் குறித்து கூறப்படும் நிலையில், அவரிடம் கம்யூனிஸ்ட் முதல்வர் நட்பு பாராட்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஎம் கட்சி கருத்து தெரிவித்த போது, "கவர்னருக்கு என்ன அதிகாரம் உண்டோ அதை வழங்க கேரள அரசு தயாராக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ, அதை கவர்னர் கடைப்பிடிப்பார்" என்று தெரிவித்துள்ளது.
இதே போல், தமிழகத்திலும் முதல்வர், கவர்னர் நட்பு பாராட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.