நாளை கூடும் மகாராஷ்டிரா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே என செய்தி வெளியாகியுள்ளது.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து அமைத்துள்ள வளர்ச்சிக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிர அரசியலில், குறிப்பாக மும்பை நகரில், பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்த, மறைந்த பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே. குறிப்பாக, பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதலாக அரசுப் பதவி ஒன்றை ஏற்பவரும் இவரே.
அக்டோபர் 24 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானாலும், பாஜகவுக்கும் சிவசேனைக்கும் இடையில் நடந்த அரசியல் மோதல், பிறகு பாஜக திடீர் பதவியேற்பு, பதவி விலகல் ஆகிய பரபரப்புகளால், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை கூடும் மகாராஷ்டிரா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே என செய்தி வெளியாகியுள்ளது.