பஞ்சாப் மாநிலத்தில் 2 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் அருகில் உள்ள மாதோப்பூர் பகுதியில் இன்று காலை நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் இஞ்சின் தடம் புரண்டு பயணிகள் ரயில் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 லோக்கோ பைலட்டுகள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணிகள் நின்றுகொண்டிருந்ததால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக அந்த வழியாக ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே துறை அதிகாரிகள், தண்டவாளத்தில் விழுந்துள்ள ரயில்களின் பெட்டிகளை அகற்றவும், ரயில் போக்குவரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் எப்படி இந்த 2 ரயில்களும் வந்தன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.