கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்தால், அது குணமாகும் வரை ஏழுமலையானை தரிசிக்க வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் மற்றவர்களிடம் பேசும் போது 3 அடி தூரத்தில் இருந்தபடியே பேசவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் இருப்பவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பதி சிம்ஸ் மருத்துவமனயில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் திருமலையில் தரிசிக்க வரும் பக்தர்கள், காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் குணமாகும் வரை ஏழுமலையானை தரிசிக்க வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.