Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட 100 வயது முதியவர்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட 100 வயது முதியவர்
, திங்கள், 9 மார்ச் 2020 (12:24 IST)
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்ந்து 7,375ஆக அதிகரித்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவை தொடர்ந்து, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதை தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தாலியில் சுமார் 1.6 கோடி மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முன்னதாக, கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும் உள்ள பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கேளிக்கை சேவைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு வருவதாக அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்திருந்தார்.
webdunia

இந்நிலையில், சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு நிலைக்கு இத்தாலி சென்றுள்ளது. இதற்கு முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த தென் கொரியாவில் மொத்தம் 7,313 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிகளவு மூத்த குடிமக்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி விளங்குகிறது. வயதானவர்களும், ஏற்கனவே நோய்வாய்பட்டவர்களும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த கருத்து உண்மை என்பது இத்தாலியிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியம் மற்றும் வெனிஸ், பர்மா மற்றும் மொடெனா உள்ளிட்ட 14 மாகாணங்களில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மொத்தம் 1.6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "எங்கள் குடிமக்களின் உடல் நலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறோம். இந்த நடவடிக்கைகளை சாத்தியப்படுத்துவதற்காக பலர் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிகிறோம்" என்று இத்தாலியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவிலிருந்து மீண்ட 100 வயது முதியவர்

கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் இதுவரை அந்நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,119ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 80,735 பேரில் 58,600 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 100 வயது முதியவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரானில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194ஆக அதிகரித்துள்ளது. மேலும், இரானில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,566ஆக உயர்நதுள்ளது.

எகிப்து, குவைத், தென் கொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்கள் சௌதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சௌதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தான் பார்வையிட்ட பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள போவதாக போர்ச்சுகல் நாட்டின் அதிபர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதால் நியூயார்க் மாகாணத்தை தொடர்ந்து தற்போது ஓரிகான் மாகாணத்திலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் குவான்சோ நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அல்பேனியா, பல்கேரியா, கொலம்பியா, கோஸ்டாரிகா, மாலத்தீவு, மால்டா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா அச்சுறுத்தல்; பள்ளிகளில் பயோ மெட்ரிக் நிறுத்தம்..