டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் ரயில் சேவைகள் பல பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பு ஜி20. இதன் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.
இதற்காக சிறு சந்திப்புகள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பல நாட்டு தலைவர்களும் வர உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து தற்போது ரயில் சேவைகளும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை அறிவிப்பின்படி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களுக்கு 207 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், 36 ரயில்கள் குறுகிய காலம் மட்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.