பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் தற்கொலைக்கு முன் 24 பக்க கடிதம் மற்றும் 90 நிமிட வீடியோவையும் பதிவு செய்து வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் ஐடி பணி செய்து வரும் சுபாஷ் என்ற 34 வயது இளைஞர் கடந்த திங்கள் அன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் தற்கொலைக்கு முன் 24 பக்க தற்கொலை குறிப்பு மற்றும் 90 நிமிட வீடியோவை பதிவு செய்துள்ளார். தன் மனைவி மற்றும் தனது மாமியார் ஆகிய இருவரும் தன் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துகிறார்கள். விவாகரத்து பெற்ற தனது மனைவி மாதம் இரண்டு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று தன்னை வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி தன்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரும் தன் மீதான வழக்குகளை வாபஸ் பெற 3 கோடியும், தனது மகனை பார்க்க வருவதற்கு 30 லட்சம் கேட்டதாகவும் கடிதத்தில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எனது குடும்பத்தினர் துன்புறுத்தப்படுகிறோம் என்றும், இப்போது நான் தற்கொலை செய்து கொண்டதால் பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும் என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது என்றும் சுபாஷ் இறுதியாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுபாஷின் தற்கொலையை அடுத்து அவரது மனைவி மற்றும் மாமியார் உறவினர்கள் தலைமறைவாகிய நிலையில், சில மணி நேரங்களில் போலீசார் அவர்களை கண்டுபிடித்து கைது செய்தனர்.