கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்த வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் நடந்தே தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடந்து செல்பவர்கள் பலர் விபத்து உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் ஐதராபாத்தில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளிகள் சிலர் மாம்பழ லாரி ஒன்றில் ஏறி தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் லாரி விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று முன் தினம் ஐதராபாத்தில் இருந்து மாம்பழம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றில் வெளிமாநில தொழிலாளர்கள் 18 பேர் பயணம் செய்தனர். இவர்களில் இரண்டு டிரைவர்கள் ஒரு கண்டக்டரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த லாரி மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த லாரி ஒரு திருப்பத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் மாம்பழ பெட்டிகளுக்கு இடையே உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் உடல் நசுங்கி 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது குறித்து மத்திய பிரதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் முறையான அனுமதியின்றி வெளிமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் அரசு வழங்கும் வாகன வசதியை மட்டும் பயன்படுத்தி தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது