திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு டிக்கெட்டுகள் நாளை வெளியாக உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ப்ரம்மோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பிரம்மோற்சவத்தை காண பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
இதனால் ப்ரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் வழியாகவே அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை விநியோகிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அக்டோபர் மாத நாட்களுக்கான சிறப்பு டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.