இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுடன் நீண்ட நாட்களாக காதல் கொண்டிருந்த இளைஞர் அந்த பெண்ணை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
காலம் காலமாக விதவிதமான முறையில் காதல் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமான காதல் கதைகள் நடக்கின்றன. அவற்றில் சில மோசடி சம்பவங்களாகவும் அமைந்துவிடுவதுண்டு.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 20 வயது இளைஞர் தீபேந்திர சிங். சமீபத்தில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் இளம்பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அழகான இளம் மங்கையின் படத்தை முகப்பு படமாக வைத்திருந்த அந்த பெண்ணுடன் தீபேந்திர சிங் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ஃபோனிலேயே பேசி காதலித்து வந்த நிலையில் தீபேந்திர சிங் அந்த பெண்ணை நேரில் காண வேண்டும் என விரும்பியுள்ளார்.
அவரது விருப்பமும் ஒரு நாளில் நிறைவேறியது. தனது அழகு காதலியை காண்பதற்காக அந்த பெண் சொன்ன இடத்தில் சென்று காத்திருந்த இளைஞருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அங்கு 45 வயது தாண்டிய பெண்மணி ஒருவர் வந்து தீபேந்திர சிங்கிடம், நான் தான் இன்ஸ்டாவில் பேசிய இளம்பெண் என்று கூறியுள்ளார். அது தான் இளமையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தீபேந்திரசிங் அந்த பெண்மணியை தாக்கிவிட்டு அவர் போனையும் எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பெண்மணி போலீஸில் அளித்த புகாரின் பேரில் தீபேந்திரசிங் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா காதல் விபரீதத்தால் இளைஞர் கம்பி எண்ணும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.