காஷ்மீரில் இந்திய ராணுவ முகாமை தாக்கிய தீவிரவாதிகள் அங்கிருந்த கிராமத்தையும் அச்சுறுத்திய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் ரைசி பகுதியில் பக்தர்கள் சென்ற பேருந்தை பயங்கரவாதிகள் தாக்கிய சம்பவத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அந்த பரபரப்பு மறைவதற்குள் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் முகாமை தாக்கியுள்ளது ஒரு தீவிரவாத கும்பல். இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் ராணுவம் பதில் தாக்குதலை நடத்தியது.
அப்போது தப்பியோடிய தீவிரவாதி ஒருவன் சுடப்பட்ட நிலையில் மற்றொருவன் தப்பி சென்றுள்ளான். அந்த தீவிரவாதியை ட்ரோன்களை பயன்படுத்தி ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் சில அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளது. முகாமை தாக்கிய பயங்கரவாதிகள் தப்பி ஓடியபோது அருகில் இருந்த கிராமம் வழியாக ஓடியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கிராமவாசி ஒருவரையும் சுட்டுள்ளனர். மேலும் தண்ணீர் கேட்பது போல ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் கிராம மக்கள் உஷாராகி விட்டதால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் துப்பாக்கியை வானத்தை நோக்கி உயர்த்தி சுட்டுக்கொண்டே சென்றதாக அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
நல்வாய்ப்பாக கிராம மக்கள் யாரும் கதவை திறக்காமல் இருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் சுடப்பட்ட கிராமவாசி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்.