உத்திர பிரதேச தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். கடந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற இவர் தற்போது சட்டமன்ற அமைச்சராக பதவி வகித்து வருகிறார். நெடுங்காலமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய பங்காற்றி வரும் இவர் தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் வேட்பாளராக நிற்கபோவதாக கோரிக்கை வைத்தார். அதை பாஜக மறுத்துவிட்டது. இதனால் தனக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லையென கோபம் கொண்ட அவர் பல இடங்களிலும் பாஜக வை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
“தற்போதைய தேர்தலில் சாமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றிபெறும். பாஜக படுதோல்வி அடையும். மேலும் தனக்கு ஒரு இடம் கொடுக்க மறுத்த பாஜக 50 இடங்களை பறிகொடுக்கும்” என கடுமையாக சாடியுள்ளார்.
மாநில ஆட்சியில் தங்களோடு கூட்டணியில் இருந்தபடி தங்களையே கேவலமாக விமர்சிக்கும் ஓம் பிரகாசின் போக்கு பாஜகவுக்கு எரிச்சலையும் உருவாக்கியுள்ளது. இதனால் முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் கேவலமான நடத்தை கொண்ட ஓம் பிரகாஷை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஆளுனர் ராம் நாயக்கிற்கு பரிந்துரை கடிதம் எழுதினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுனர் ஓம் ப்ரகாஷையும், அவரது கட்சியினரையும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு பதில் அளித்த ஓம் ப்ரகாஷ் “முதல்வர் ஆதித்யநாத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அவர் அமைத்துள்ள சமூக நீதிக்குழு அறிக்கை குப்பைக்குதான் போகப்போகிறது. நேரம் இருந்தால் அதை சீக்கிரம் அமல்படுத்த கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.