மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன்.. 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம்: நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியிலிருந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவரது உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஒரு ஆண்டு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன்கள் வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்றும் அந்த கடன்களை 50 ஆண்டுகளில் மாநிலங்கள் மத்திய அரசுக்கு வட்டி இல்லாமல் திருப்பி செலுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில்வே துறைக்காக நிதி ஒதுக்கீடு ரூ.2,40,000 கோடி என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் சாலை உள்ளிட்ட போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தனியாக டிஜி லாக்கர் உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.