பீகார் மாநிலத்தில் நடந்த திருமணத்தில், மணமேடையிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி என்ற மாவட்டத்தில் உள்ள சோன்பர்சா பகுதியில் இன்று திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
திருமணம் நடக்கவிருந்த மணமகன் சமீபத்தில் குரூப் டி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
திருமண நாளன்று, மணமகன் சுரேந்திரகுமாரை குதிரையின் மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
ஊரில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ குழுமியிருந்த நிலையில், மணமேடையில், மணமகள் அருகில் சுரேந்திரகுமார் அமரவைக்கப்பட்டார்.
அப்போது, ஒலித்துக் கொண்டிருந்த இசைக்கேற்ப அனைவரும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.
இந்த இசையின் சத்தத்தைக் குறைக்க வேண்டுமென்று மணமகன் கூறினார். ஆனால், யாரும் அதைக் கேட்கவில்லை.
இதற்கிடையில் மணமகன், மணமகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அப்போது, திடீரென்று சுரேந்திரகுமார் சரிந்து விழுந்தார்.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறினார்.
அதிக இசை சத்தால், மணமகன் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.