உத்தர பிரதேசத்தில் பெற்றக் குழந்தைகளை ஆற்றில் வீசி தாயே கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் அவுரையா மாவட்டத்தில் உள்ள பராவுயா கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா என்ற பெண். திருமணமான இவருக்கு 6 வயது, 5 வயது, 4 வயதில் மூன்று குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு பச்சிளம் குழந்தையும் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் முன்னதாக கடைசி குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ப்ரியங்காவின் கணவர் இறந்துவிட்டார். பெரும் பொருளாதார பின்புலம் இல்லாத பிரியங்கா நான்கு குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமப்பட்ட நிலையில் உறவினர்கள், ஊரார் உதவியும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
தன்னால் முடிந்த அளவு முயன்று குழந்தைகளுக்கு உணவு அளிக்க முயன்றுள்ளார். ஆனால் பல நாள் பட்டினி கிடக்கும் நிலையே இருந்து வந்துள்ளது. இதனால் குழந்தைகள் பசியில் துடித்த நிலையில் பிரியங்கா மோசமான முடிவை எடுத்துள்ளார். தனது 4 குழந்தைகளையும் அங்குள்ள கேசம்பூர் காட் நதிக்கு அழைத்து சென்றவர், முதலில் 6 வயது மகனையும், 5 வயது மகனையும் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றுள்ளார்.
இதை பார்த்த பொதுமக்கள் சிலர் ஓடி சென்று பிரியங்காவை தடுத்ததாக தெரிகிறது. மேலும் தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடம் விரைந்துள்ளனர். அங்கு 4 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். பிரியங்காவுடன் இருந்த ஒன்றரை வயது குழந்தை மாயமான நிலையில் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இறந்து போன இரண்டு சிறுவர்களின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏழ்மை காரணமாக குழந்தைகளை தானே கொல்ல துணிந்த பிரியங்காவால் அந்த பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.