ஜிம் ட்ரெய்னர் ஒருவருடன் கள்ள உறவில் இருந்த பெண், அதை கண்டுபிடித்த கணவரை ரகசியமாக திட்டமிட்டு கொலை செய்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து அந்த உண்மை வெளியே வந்துள்ளது.
சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் வினோத் பரரா. இவருக்கு நித்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் வினோத் பயணித்த கார் மீது லாரி ஒன்று மோதிய வழக்கில் லாரி டிரைவர் தேவ் சுனர் மீது வினோத் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் லாரி டிரைவர் தேவ் சுனர், வினோத்தை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் லாரி டிரைவர் தேவ் சுனர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக இறந்து போன வினோத்தின் சகோதரர் ஆஸ்திரேலியாவிலிருந்து காவல்துறைக்கு செய்தி அனுப்பியுள்ளார். அதில் தன் சகோதரர் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், சாதாரண விபத்து வழக்கிற்காக லாரி டிரைவர் ஒருவர் தொழிலதிபர் ஒருவரை கொலை செய்திருப்பது போலீஸாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த வழக்கில் போலீஸார் மறுவிசாரணை நடத்திய நிலையில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது. வினோத்தின் மனைவி நித்தி ஜிம் ஒன்றில் உடற்பயுற்சி செய்து வந்த நிலையில் அங்கு ட்ரெய்னராக இருந்த சுமித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக இது மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதும், உல்லாசமாக இருப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் வினோத்திற்கு தெரிய வர அவர் தனது மனைவி நித்தியை கண்டித்துள்ளார். தான் கணவன் உயிருடன் இருந்தால் தாங்கள் இன்பமாக இருக்க முடியாது என்பதால் ஜிம் ட்ரெய்னர் சுமித்துடன் சேர்ந்து வினோத்தை கொல்ல திட்டமிட்டுள்ளார் நித்தி.
அதன்படி சுமித்தின் நண்பரான லாரி டிரைவர் தேவ் சுனருக்கு ரூ.10 லட்சம் கொடுத்து விபத்து ஏற்படுத்தி வினோத்தை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த விபத்தில் வினோத் தப்பித்துவிட்டார். இதனால் மறுபடியும் லாரி டிரைவரை வைத்தே வினோத்தை சுட்டுக் கொன்றுவிட்டு விபத்தில் ஏற்பட்ட பகை போல நாடகமாடியுள்ளனர்.
வழக்கு முடிந்துவிட்டதால் நிம்மதியடைந்த அவர்கள் உடனே வெளிநாடு சுற்றுலா சென்று கொண்டாடியுள்ளனர். வினோத் இறந்ததால் கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தை லாரி டிரைவர் குடும்பத்திற்கு கொடுத்து இந்த உண்மை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை ஒருநாள் வெளிவராமல் இருக்காது என்ற வகையில் 3 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் வெளியே தெரிய வந்து தற்போது கள்ளக்காதல் தம்பதிகள் கொலை வழக்கில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.