தெலங்கானாவின் நாகார்கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் ஒரு தொழிலாளியின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகார்கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்தின் கீழ், பாறை வெட்டி சுரங்கம் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, அந்த சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சுரங்கத்தின் 14 கி.மீ. ஆழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 8 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், 2 பொறியாளர்கள், 2 இயந்திர ஓட்டுநர்கள் மற்றும் 4 தொழிலாளர்கள் அடங்குவர். இவர்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்திற்குப் பிறகு, கேரளத்திலிருந்து மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மார்ச் 9ஆம் தேதி, இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மீட்புப் பணிகள் ஒரு மாதமாக தொடரும் நிலையில், இன்று அதிகாலை மற்றொரு உடல் மீட்கப்பட்டுள்ளது.
சிக்கியிருந்த தொழிலாளர்களுள் ஒருவரின் உடல், கன்வேயர் பெல்ட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் காணப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உடலை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட உடல், மரபணு பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..