எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி ஆக இருக்கும் அமேதியில், ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளி சந்தன் வர்மா என்பவர் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பயன்படுத்திய ஆயுதத்தை எடுப்பதற்காக அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து, துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இதில் சந்தன் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மனைவி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததை அடுத்து, சந்தன் வர்மா அவரது குடும்பத்தின் மீது பகையில் இருந்ததாகவும், அதனால் அவரது குடும்பத்தையே கொலை செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கொலையாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்ட நிலையில், சந்தன் வர்மா அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.