தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் அதானி குழுமத்தின் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்கி வருகிறது. தமிழர்கள் உள்பட, அந்த பகுதியில் அதிக அளவு மக்கள் வசித்து வருகின்றனர். சின்னச்சின்ன வீடுகளில் அவர்கள் குடியிருந்து வருகிறார்கள். மும்பைக்கு பிற மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களுக்கு இதுவே ஒரே ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில், தாராவில் அடுக்கு மாடிகளை உருவாக்கும் சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. முதலில், இந்த திட்டத்துக்கான டெண்டர் ஒரு துபாய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது.
இதைக் எதிர்த்து, துபாய் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம், அதானி குழுமத்திற்கு திட்டத்தை வழங்கிய அரசின் முடிவை உறுதி செய்தது.
இதனை அடுத்து, துபாய் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், கட்டுமான பணிகளை நிறுத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா அரசுக்கும் அதானி குழுமத்திற்கும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.