ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி60 என்ற ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் இந்தியா மகத்தான சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பேடெக்ஸ் என்னும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை இஸ்ரோ அனுப்பி வரும் நிலையில், ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என இரண்டு விண்கலங்களை இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த இரட்டை விண்கலன்கள் சரியாக நேற்றிரவு பத்து மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக நிலை நிறுத்தப்படவுள்ளது. நேற்று முன்தினம் 25 மணி நேர கவுண்டவுன் தொடங்கிய நிலையில், எரிபொருள் நிரப்புதல் உள்பட அனைத்து இறுதி கட்ட பணிகளும் சரியாக முடிந்து, பத்து மணிக்கு சரியாக ஏவப்பட்டது.
ஸ்பேடெக்ஸ் சோதனை வெற்றியின் மூலம், உலகிலேயே இந்த செயல்முறையை தொடங்கிய நான்காவது நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி உள்ளார். மேலும், விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவுவது, தரவுகளை சேகரிப்பது, சந்திராயன் 4 திட்டம் உள்ளிட்ட இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு இது அடிப்படை சோதனையாக விளங்கும் என்றும், இஸ்ரோவின் சாதனைகள் ஒரு புதிய மைல்கல் என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.