பள்ளியின் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்ட மாணவன், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் ஹர்ஷவர்தன் என்ற ஆறு வயது சிறுவன், ஈஸ்ட்பேட்டை நகராட்சிப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் சக நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஹர்ஷவர்தனை சக மாணவர்கள் விளையாட்டாக பள்ளி கழிவறையில் பூட்டி வைத்து விட்டு வெளியில் தாழ்ப்பாள் போட்டு வகுப்பறைக்கு சென்று விட்டனர். கழிவறைக்குள் இருட்டாக இருந்ததால், ஹர்ஷவர்தன் பயத்தில் கத்தி அழுதுள்ளான்.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள், ஹர்ஷவர்தனை மீட்டு பள்ளி ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். கழிவறையின் இருட்டை கண்டு பயந்துபோன ஹர்ஷவர்தனுக்கு காய்ச்சல் எற்பட்டது. அதனால் அவனது பெற்றோர்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஹர்ஷவர்தன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பணியில் கவனக்குறைவாக இருந்த வகுப்பு ஆசிரியையை போலீஸார் எச்சரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.