ப.சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாதியில் இறங்கி சென்றுவிட்டார் என தெரியவந்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் ப.சிதம்பரம் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியாத நிலையில் இன்று அவருடைய முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றம் இது குறித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ப.சிதம்பரத்தை எப்போது வேண்டுமானாலும் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், நேற்று மாலை காரில் வந்த ப.சிதம்பரம் பாதி வழியிலேயே இறங்கியதாகவும், அதன் பிறகு எங்கு சென்றார் என தெரியாது எனவும் ஓட்டுநர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எங்கே போய்யுள்ளார் என தெரியவில்லை.
மேலும், ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என சிபிஐ கோரியுள்ளது.
இதே சமயத்தில் நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை என ப.சிதம்பரம் தரப்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.