லட்சத்தீவுக்கான மத்திய அரசின் அதிகாரியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு சட்டமன்றம் இல்லாததால் ஒன்றிய அரசே நிர்வாகியை நியமித்து வருகிறது. இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதில் முக்கியமாக அங்கு குழந்தைகளின் உணவில் மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த தீவுகளில் உள்ள 60000 மக்களும் அவர் மேல் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து இப்போது அந்த அதிகாரியை மத்திய அரசு திரும்பி பெறவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, பிரபுல் கோடா படேலை திரும்ப பெறவேண்டும் எனக் கூறியுள்ளார். அவரின் டிவிட்டர் பக்கத்தில் Lakshadweep-இல் பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. PMO India தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்எனக் கூறியுள்ளார்.