உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் 17 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் கவனக்குறைவால் வைத்த கத்திரிக்கோல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு சிசேரியன் மூலம் பிரசவம் செய்யப்பட்டது. அதன் பின், பல ஆண்டுகளாக வயிற்றுவலி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அவ்வப்போது மருத்துவரிடம் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்றுவலி அதிகமாகியதால், எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கத்திரிக்கோலை அகற்றினர்.
இது குறித்து சந்தியாவின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவிக்கு பிரசவம் செய்த டாக்டர் கவனக் குறைவால் கத்திரிக்கோலை வயிற்றில் விட்டுவிட்டார் என்றும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.