மத்திய பிரதேசம் மாநிலத்தில் 70 வயது முதியவரை அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அடித்து, தரையில் தரதர என இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்திர்பூர் அரசு மருத்துவமனையில் உத்தவ்சிங் ஜோஷி என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்தபோது, நீண்ட வரிசையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவர் ராஜேஷ் மிஸ்ரா என்பவரிடம் அவர் தனது ஆதங்கத்தை கூற, உடனே அந்த மருத்துவர் அவரை கன்னத்தில் அறைந்து, உதைத்தார்.
"வரிசையை மீறி சிலர் செல்வதாக" குற்றச்சாட்டு கூறியதற்காகவே தான், மருத்துவர் அந்த முதியவரை அடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
அது மட்டுமின்றி, அந்த முதியவரை அடித்து உதைத்து, தரதர என மருத்துவரும், மருத்துவ ஊழியர்களும் இழுத்து வெளியே விரட்டிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, மருத்துவர் மிஸ்ராவுக்கு எதிராக காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. "இந்த வழக்கு விரைவில் விசாரணை செய்யப்படும்" என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
மருத்துவர்கள் மனிதாபிமானம் இன்றி, மிகவும் மோசமாக 70 வயது முதியவரை தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை எடுத்துக் கொண்டு, அந்த மருத்துவருக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.