கர்நாடகா வெடி விபத்தில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கல்குவாரிக்கு டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறியதில் 15 - 20 கிமீ தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த விபத்தால் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.
மேலும், இந்த பயங்கர வெடிவிபத்தால் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தும், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் விரிசல் விட்டும் காணப்பட்டது. இதனிடையே வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அண்டை மாவட்டங்களான சிக்மகளூர் மற்றும் உத்தர கன்னடாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
வெடி விபத்து ஏற்பட்ட சிவமோகா பகுதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் சொந்த ஊராகும். இந்த விபத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படும் நிலையில் விபத்து நடந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக மாநில முதல்வர் எடியுரப்பா உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.