புதுச்சேரியில் 700 வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதில் கேரள அரசுக்கு ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நடிகை அமலாபால், பகத்பாசில் ஆகியோர் போலியான முகவரி மூலம் புதுச்சேரியில் தங்கள் சொகுசு கார்களை பதிவு செய்துள்ளனர் என்கிற புகார் சமீபத்தில் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கேரள போக்குவரத்து அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், 700 சொகுசு கார்கள் புதுச்சேரி முகவரியில் பதிவு செய்யப்பட்டு, கேரளாவில் ஓட்டப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
கேரள அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை தவிர்ப்பதற்காகவே இதை செய்துள்ளனர் என்பதும், இதனால், கேரள அரசுக்கு ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அப்படி கார் வாங்கிய அனைவருக்கும் விளக்கம் கேட்டு கேரள அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், அமலாபாலும், பகத்பாசிலும் கேரளாவில் தங்கள் கார்களை மீண்டும் பதிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.