ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில் தவறு செய்த மாணவர்களைக் கட்டிவைத்து தண்டனைக் கொடுத்த பள்ளி நிர்வாகத்தின் மேல் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் படிக்கும் இரு மாணவர்கள் வகுப்பறையில் தங்கள் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுதுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது. ஏன் இவ்வாறு கட்டி வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில் அதில் ஒரு மாணவன் மாணவி ஒருவருக்குக் காதல் கடிதம் எழுதியதாகவும் மற்றொரு மாணவன் பிறரின் பொருட்களை திருடியதாகவும் சொல்லப்பட்டது.
பிஞ்சு மாணவர்கள் செய்த இந்த விஷயங்களுக்கா இத்தகைய தண்டனை எனக் குரல்கள் எழ, பள்ளி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்தான் அவ்வாறு கட்டிப்போட்டது எனக் கூறியுள்ளது. அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் பள்ளி நிர்வாகம் எப்படி அதை அனுமதிக்கலாம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.