பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் காரில் பயணித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரிஷப் பண்ட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் அபாய கட்டத்தில் இல்லை, நலமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு எங்கெங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரிஷப் பண்ட்டுக்கு வலது முழங்காலின் தசை நார் கிழிந்துள்ளது. நெற்றி, வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கட்டை விரலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. இந்த காயங்கள் குணமடைந்து ரிஷப் பண்ட் மீண்டு வந்தாலும் அணியில் இடம்பெற தகுதியை நிரூபித்தாக வேண்டும். அவர் மீண்டும் கிரிக்கெட்டில் நுழையும் அளவிற்கு அவரது உடல்நலம் பெற வேண்டும் என்பது பலரது வேண்டுதலாக உள்ளது. இதனால் பண்ட்டின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.