இந்தியாவில் கூகிள் பே உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளிலும் பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. பல்வேறு உணவகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக பகுதிகளிலும் ஆன்லைனில் பணம் செலுத்தக்கூடிய கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் கூகிள் பே. போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக அன்றாடம் மக்கள் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிங்கிள் டீ குடிப்பது தொடங்கி பெரிய அளவிலான தொகையை அனுப்புவது இந்த செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்த பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் விதிக்கலாமா என்று ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.