சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chandrababu Naidu, Narendra Modi
இந்தியா முழுவதும் 543 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்ற அதேசமயம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த இரு தேர்தல்களிலுமே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் தெலுங்கு தேசம், மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஜூன் 12ம் தேதி சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பரப்புரை செய்து வந்தபோது, காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாமியர்களுக்கு ஓபிசி மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து கொடுக்க முயற்சிப்பதாகவும், தாங்கள் அதை நடக்க விட மாட்டோம் என்றும் பேசியிருந்தார்
இந்நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அவரது மகன் நாரா லோகேஷ், தாங்கள் ஆட்சி அமைத்ததும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என பேசியுள்ளார். இதை தாங்கள் வாக்கு அரசியலுக்காக செய்ய முயலவில்லை என்றும், உண்மையாகவே வறுமையை ஒழிக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் இதை செய்ய உள்ளதாக பேசியுள்ளார்.
மத்தியில் தெலுங்கு தேசம் கூட்டணியில் உள்ள பாஜக இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசி வரும் நிலையில் , கூட்டணியில் இருந்துகொண்டே தெலுங்கு தேசம் இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பேசியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது.