சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக வெளியான வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் அதுகுறித்த விளக்கத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் அமலுக்கு வந்த முதற்கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஏப்ரல் 20க்கு பிறகு சில விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதற்கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் நேற்று மும்பையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக வெளியான வதந்தியை நம்பி வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பந்த்ரா ரயில் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில பகுதிகளிலும் இதுபோன்ற சிறப்பு ரயில் வதந்திகள் பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.s அதில் ”அனைத்து ரயில் சேவைகளும் மே 3 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்காக எந்த சிறப்பு ரயிலும் இயக்கப்படவில்லை. அதனால் போலி செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளது.