புல்வாலா தாக்குதலில் உயிரிழந்த ராணூவ வீரர்களுக்கும் அரசுக்கும் ஆதரவு தெரிவித்து இன்னும் இரண்டு நாட்களுக்கு எந்தவிதமான அரசியல் பேச்சுகளிலும் ஈடுபடப் போவதில்லை என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இன்று திடிரென்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள 38 ராணுவ வீரர்கள் பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பல ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீவிரவாதத் தாக்குதலுக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்திய அரசு தனது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் உடனடியாகப் பதில் தாக்குதலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய அரசுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நானும் , காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக இருப்போம். அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தவிதமான அரசியல் பேச்சுவார்த்தையும் இல்லை. எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது.’ எனக் கூறியுள்ளார்.