கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி, அமேதியில் தோல்வி அடைந்தாலும் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார்.
இந்த நிலையில் வயநாடு எம்பியாக ராகுல்காந்தி நேற்று மக்களவையில் கேரள விவசாயிகளின் பிரச்சினையை குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ராகுல்காந்திக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
வாங்கிய கடனுக்காக 8 ஆயிரம் விவசாயிகளை நோட்டீஸ் அனுப்பி வங்கிகள் மிரட்டுவதாக கூறிய ராகுல்காந்தி, விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் சட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயிகளின் இந்த பரிதாபகரமான நிலைக்கு 49 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களே காரணம் என்று காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.