அசாமில் தேசிய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடை பயணமான தேசிய ஒற்றுமை நீதி பயணம் கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நேற்று அசாம் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், அசாமில் தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அசாம் முதல்வர் மற்றும் டிஜிபிக்கு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.