பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சோசலிசத் தலைவருமான கர்ப்பூரித் தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ''கர்ப்பூரித் தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், நாடு முழுவதும் சமூகநீதித் தென்றல் வீசட்டும்!'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சோசலிசத் தலைவருமான கர்ப்பூரித் தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. கடும் எதிர்ப்பையும் மீறி பிகார் மாநிலத்தில் 26% இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு உள்ளிட்ட சமூகப் புரட்சிகளை செய்த தலைவரான கர்ப்பூரி தாக்கூருக்கு அவரது பிறந்தநாள் நூற்றாண்டில் பாரதரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. இது அந்த விருதுக்கு பெருமை சேர்க்கும்.
சமூகநீதியையும், மதுவிலக்கையும் சாதித்துக் காட்டிய கர்ப்பூரித் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் நாடு முழுவதும் சமூகநீதித் தென்றல் வீசவும், மதுவிலக்கு மலரவும் வகை செய்யட்டும்!''என்று தெரிவித்துள்ளார்.