மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக தன்னிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையத்தால் மறைந்துகொள்ளக்கூட இடம் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம் மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் இருந்தது. ஆனால், மகாராஷ்டிராவில் இந்த சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் கட்சி விரிவான ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், எந்த பதவியில் இருந்தாலும், நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓய்வு பெற்ற பிறகும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனடியாக ஒரு சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.