Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடந்த 3 ஆண்டுகளில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை: திமுக ஆட்சிக்கு அன்புமணி கண்டனம்

Advertiesment
Anbumani

Siva

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (12:34 IST)
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை என திமுக ஆட்சிக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதோ, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதோ சாத்தியமில்லை என்றாகிவிட்ட நிலையில், மருத்துவக் கல்வி கட்டமைப்பை விரிவாக்குவதில் அரசு காட்டும் அலட்சியம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
 
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், அவற்றில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
 
இதன்மூலம், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள் தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் இந்தியப் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன்.
 
அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது எனும் போது, பா.ம.கவின் போராட்டத்தால் கிடைத்த கடைசி வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
 
ஆனால், அந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. அதுமட்டுமின்றி புதிய கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்காதது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி அளித்துள்ள விளக்கம் வருத்தத்தை அளிக்கிறது. ‘இந்தியாவிலேயே எங்களிடம் (தமிழ்நாட்டில்) தான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றை அதே எண்ணிக்கையிலான இடங்களுடன் தொடர்ந்து நடத்துவோம்’ என்று மருத்துவர் சங்குமணி கூறியிருக்கிறார். புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்பதையே மருத்துவக்கல்வி இயக்குனர் அளித்துள்ள விளக்கம் காட்டுகிறது. இது மருத்துவக் கல்வி வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும்.
 
 
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு ஆகும். அந்த இலக்கை எட்ட தமிழக அரசு அனைத்து வகைகளிலும் போராடியிருக்க வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.
 
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை என்பதை மன்னிக்கவே முடியாது. 1984 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக நீடித்த எந்த ஆட்சியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததே இல்லை. 40 ஆண்டுகளில் நடப்பு திமுக அரசு தான், அதன் ஐந்தாண்டு ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு கூடுதல் மாணவர் சேர்க்கை இடத்தைக் கூட உருவாக்கவில்லை என்ற அவப்பெயரை சுமக்கப் போகிறது. திமுக அரசு அதன் கடந்தகால தவறுகளை களைவதற்கு சிறந்த வழி புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது மட்டும் தான். எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று படுவீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன?