பஞ்சாப் மாநிலம், தனது அண்டை மாநிலமான ஹரியானாவுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தின் கீழ் நீரை பகிர்ந்து கொடுத்து வந்தது. ஏப்ரல் மாதத்தில், குடிநீர் தேவைக்காக ஹரியானா பஞ்சாபிடம் கூடுதலாக தண்ணீர் கேட்டு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் தங்கள் நீர்மூலம் குறைவாகவே இருப்பதாக பஞ்சாப் அரசு மறுத்தது.
இதனையடுத்து, பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் கூட்டப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானாவுக்கு தண்ணீர் திறக்க மத்திய அரசு மற்றும் ஹரியானா அரசு இணைந்து தீர்மானித்தன. இதற்கு பஞ்சாப் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் பரிந்தர் குமார் கோயல் "ஒரு சொட்டு கூட கூடுதலாக ஹரியானாவுக்கு தண்ணீர் தரமாட்டோம்" என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களுக்கு கால்வாய் தண்ணீர் வழங்கும் திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஹரியானாவுக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான காரணமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் 8,500 கனஅடி தேவைப்படுகிறது எனக் கூறுகிறார்கள். அதை வழங்க இயலாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.