குஜராத் மாநிலம் சூரத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சிறுவர்கள் செல்போனில் ஆர்வத்துடன் விளையாடும் விளையாட்டுதான் பப்ஜி கேம். பொழுதுபோக்கு விளையாட்டு அம்சம் கொண்ட பப்ஜி கேம் தற்போது சிறுவர் முதல் முதியோர் வரை பலரை அடிமையாக்கியுள்ளது.
இரவு பகலென எல்லா நேரங்களிலும் பப்ஜி விளையாட்டை இணையத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் மனதளவில் அடிமையாக்கி விடுகிறது. மேலும் இந்த விளையாட்டின் வீரியத்தால் பல வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சமீபத்தில்கூட மகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது சார்ஜ் தீர்ந்து போன ஆத்திரத்தில் நபர் ஒருவர் மற்றொரு நபரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பப்ஜி கேமை தடைவிதிக்க கோரி நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்து மாவட்ட காவல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சூரத்தில் ஏற்கனவே பள்ளிக்குழந்தைகள் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.