இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா பாதிப்பு வேகமாக பரவிய நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 100 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி “கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். தடுப்பூசிகள் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமது தேசம் பங்களிக்க முடிந்ததைக் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு இதில் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.