வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12வது நாளாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ள நிலையில், 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் மேலும் 138 பேர் காணாமல் போன நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று கேரளா வந்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான் உடன் கண்ணணூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் சென்று நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேரள முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என மோடி உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.