மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனருக்கு கொரோனா
இந்தியாவின் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் மொத்த பாதிப்பு இரண்டரை லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவில் பதவி உயர் பதவியில் இருப்பவர்களையும் கொரோனா தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே போலீஸ் உயரதிகாரிகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இயக்குனர் தத்வாலியா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட தத்வாலியா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர்களை கடந்த புதன்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட தத்வாலியா சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அடுத்து அவர் சந்தித்த மத்திய அமைச்சர்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இயக்குனர் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது