பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என்ற பட்டத்தை பயன்படுத்தலாமா கூடாதா என்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடிக்கடி தனது முடிவுகளை மாற்றி வருவது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம்: மத்திய அரசு பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
செப்டம்பர் 9: இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றும் பிற மருத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது. பிசியோதெரபிஸ்டுகள் தங்களை 'டாக்டர்' என அழைப்பது நோயாளிகளை தவறாக வழிநடத்தும் என்று கூறி, இந்த பட்டத்தைப் பயன்படுத்த தடை விதித்தது.
செப்டம்பர் 10: இந்த உத்தரவை மத்திய அரசு 8 மணி நேரத்திற்குள் மீண்டும் திரும்ப பெற்றது. இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறி, பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என தெரிவித்தது.
மத்திய அரசின் இந்தத் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.