உத்தரப்பிரதேச மாநிலத்தில் மசூதி மேல் ஏறி காவி கொடியை இந்து அமைப்பினர் பறக்கவிட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
நேற்று நாடு முழுவதும் ராமநவமி கொண்டாடப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக் ராஜ் என்ற நகரில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்து அமைப்பினர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் சுவரின் மேல் ஏறி, காவி கொடிகளை கையில் ஏந்தி "ஸ்ரீ ராம்" என கோஷமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தர்காவின் மேல் ஏறி "ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷமிட்டு, கொடிகளை கட்டியதாகவும், தர்காவை அகற்றி அதன் இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று கோஷமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இந்து அமைப்பினரை தர்காவிலிருந்து வெளியேற்றினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே பதட்டம் குறைந்ததாக கூறப்படுகிறது.