மக்களவையில் இன்று காலை கூட்டம் தொடங்கியவுடன், அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறியதை அடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மக்களவை தொடங்கியதும், மீண்டும் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், மணிப்பூர் விவகாரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட கேள்விகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
இதனால், மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, பிற்பகல் 12 மணி வரை மக்களவை செயல்பாடுகள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
12 மணிக்கு மீண்டும் மக்களவை கூடினாலும், இதே பிரச்சினைகளை மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.